மாத்தறை, வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் (தலைவர்) எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி தெரிவு செய்யப்படுவார் என அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தென் பிராந்திய உள்ளூராட்சி சபைக்கான ஆணையாளர் நாயகம் எராண்டி உமங்கா மெண்டிஸ் இந்த வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு பிரதேச சபையில் இது தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர அண்மையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததை அடுத்து, குறித்த பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது. இந்த நிலையிலேயே, குறித்த பதவிக்கு புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.