வலி. வடக்கு தையிட்டி பகுதியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜ மகா விகாரையில், எதிர்வரும் ஜனவரி மாதம் (தை மாதம்) 3-ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று புதிய புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக மகா சங்கத்தினரால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் பின்வரும் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன:
தை 3-ஆம் திகதி காலை 10:00 மணிக்கு, ‘கன்யாசந்துவ தும்ரி ஸ்தாச சிதி ராஜ விஹாரையில்’ இருந்து கொண்டு வரப்படும் புத்தர் சிலை, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திஸ்ஸ ராஜ விஹாரையில் பிரதிஷ்டை செய்யப்படும்.
இதில் பௌத்த துறவிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், அவர்கள் எவ்வித அச்சமுமின்றி விகாரைக்கு வந்து செல்வதை உறுதிப்படுத்த காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் சர்ச்சைக்குரிய சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறித்த விகாரை சட்டவிரோதமானது எனக் கூறி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் அங்கு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விகாரை தனியாருக்குச் சொந்தமான காணியில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ளதாக வலி. வடக்கு பிரதேச சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், அங்கு எவ்வித கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என விகாரதிபதிக்கு ஏற்கனவே எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், தடையையும் மீறி புதிய புத்தர் சிலையை நிறுவுவதற்கான இந்த முயற்சி, அப்பகுதியில் தேவையற்ற மத ரீதியான முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கான திட்டமிட்ட செயலோ என்ற பலத்த சந்தேகத்தை பொதுமக்கள் மற்றும் அரசியல் தரப்பினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.