பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் (PTA) பதிலீடு செய்யும் வகையில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டவரைவு, முந்தைய சட்டங்களை விடவும் மோசமான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
நீதியமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ எனும் புதிய வரைவு குறித்து சுமந்திரன் முன்வைத்துள்ள முக்கிய கருத்துக்கள்:
தற்போது நடைமுறையிலுள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தை விடவும், கடந்த அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை விடவும் இப்புதிய வரைவில் ஆபத்தான விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தி (NPP) எதிர்க்கட்சியாக இருந்தபோதும், தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என்றே கூறியிருந்தது. ஆனால், தற்போது மற்றொரு சட்டத்தின் ஊடாக அதனைப் பதிலீடு செய்ய முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குத் தனித்துவமான பிரத்யேக சட்டமொன்று தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலேயே தேசிய மக்கள் சக்தி முன்னர் இருந்ததை அவர் நினைவுபடுத்தினார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்த எம்.ஏ.சுமந்திரன், இப்புதிய பதிலீட்டு நடவடிக்கையைத் தாம் முற்றாக எதிர்க்கப் போவதாகத் தெரிவித்தார். மேலும், புதிய வரைவின் உள்ளடக்கங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, தமது ஆட்சேபனைகளை மிக விரைவில் நீதியமைச்சுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.