அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்து அவர், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேணுவதே இந்தியாவின் கொள்கை. இயற்கை பேரிடர் காலங்களில் அந்த நாடுகளுக்கு முதல் ஆளாக இந்தியா உதவி வருகிறது.
இந்தியா செய்யும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமானது. மேற்கு நாடுகள் இந்தியா குறித்து வைத்திருக்கும் தவறான பார்வையை மாற்ற நேர்மையான உரையாடல்கள் அவசியம். அவர்களின் கூட்டாண்மையை இந்தியா ஒதுக்கிவிட முடியாது.
பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியாவின் கடும்போக்கை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
“நல்ல எண்ணமும், விரோத எண்ணமும் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள முடியாது. எமது மக்களின் பாதுகாப்புக்காகவும் நாட்டின் அமைதிக்காகவும் எதைச் செய்ய வேண்டுமோ, அதை இந்தியா கண்டிப்பாகச் செய்யும்.”
இந்தியாவின் வளர்ச்சி என்பது அண்டை நாடுகளையும் அரவணைத்துச் செல்வதாகவே அமையும் எனத் தெரிவித்த அவர், அதேவேளை தேசிய பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.