ஜனாதிபதி நிதியத்திலிருந்து (President’s Fund) கடந்த காலங்களில் 56 நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்குச் சட்டத்திற்குப் புறம்பாக 130 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை மருத்துவ உதவியாக வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய தணிக்கை அலுவலகம் (National Audit Office) அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த நிதி முறைகேடுகள் 2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான நீண்ட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.
விண்ணப்பப் படிவம், வருமான வரம்பு, பிரதேச செயலாளரின் உறுதிப்படுத்தல் மற்றும் மருத்துவ உதவி வரம்புகள் போன்ற எந்தவொரு அடிப்படை விதிகளையும் பின்பற்றாமல் இந்த நிதிகள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் ஒருவருக்குச் சட்ட விதிகளுக்குப் புறம்பாக சுமார் 3 கோடி ரூபாய் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கோடியே 37 இலட்சம் ரூபாய் ‘மீட்பு அடிப்படையில்’ (Recovery basis) வழங்கப்பட்ட போதிலும், அந்தத் தொகை இதுவரை மீள வசூலிக்கப்படவில்லை.
கஜனாதிபதி நிதியிலிருந்து கடன் வழங்க சட்டத்தில் இடமில்லாத நிலையிலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையும் இதுவரை அரசுக்குக் கிடைக்கவில்லை.
அரச நிதியைத் தகுதியற்ற நபர்களுக்கு, குறிப்பாக மக்கள் பிரதிநிதிகளுக்குச் சட்டவிரோதமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கத் தணிக்கை அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.

