மாகாண சபைகளில் நிதி ஒழுக்கமின்மை: திறைசேரி பணத்தில் அதிகாரிகள் முறையற்ற கொடுப்பனவு – கணக்காய்வு அறிக்கை!

25 67e684f079ac7

இலங்கையிலுள்ள மாகாண சபைகள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதியை முறையற்ற மற்றும் சிக்கனமற்ற வகையில் பயன்படுத்துவதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் (National Audit Office) தனது 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் கடுமையாக எச்சரித்துள்ளது.

2024 ஆம் ஆண்டிற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கும் அரசாங்கத்தினால் 437,365 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகளின் மொத்த வருமானத்தில் 83 சதவீதம் அரசாங்கத்தின் நேரடிப் பங்களிப்பாகும். இதன் மூலம் நிர்வாகச் செலவுகளுக்கு மாகாண சபைகள் முழுமையாகத் திறைசேரியையே சார்ந்துள்ளமை உறுதியாகியுள்ளது.

மாகாண சபைகளின் அதிகாரிகள் நிதி விதிகளுக்குப் புறம்பாகப் பல்வேறு சலுகைகளைப் பெற்றுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கச் சுற்றுநிருபங்களை மீறி, மாகாண ஆளுநர்களின் விசேட அனுமதியைப் பெற்று அதிகாரிகள் தமக்கான எரிபொருள் கொடுப்பனவுகளைத் தன்னிச்சையாக அதிகரித்துக் கொண்டுள்ளனர்.

நியாயமற்ற மற்றும் விதிமுறைகளுக்குப் புறம்பான பல்வேறு மேலதிக கொடுப்பனவுகள் (Special Allowances) அதிகாரிகளால் பெறப்பட்டுள்ளன. நிறுவனக் கோவையின் (Establishment Code) விதிகளைப் பின்பற்றாமல், தன்னிச்சையான முறையில் வீட்டு வாடகைக் கொடுப்பனவுகளை அதிகாரிகள் பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்தின் நிதியில் இயங்கிக்கொண்டு, பொறுப்பற்ற முறையில் இவ்வாறான செலவுகளை மேற்கொள்வது மாகாண சபைகளின் நிதி நிர்வாகத்தில் உள்ள பாரிய பலவீனத்தை வெளிப்படுத்துவதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நிதி ஒழுக்கமின்மை தொடர்ந்தால் மாகாண மட்டத்திலான அபிவிருத்திப் பணிகள் பாதிக்கப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

 

 

Exit mobile version