தமிழர்களுக்குத் தீர்வாக 13ஆவது திருத்தத்தை வழங்குவோம் என்று கூறியவர்கள், மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“போரை முடிவுக்குக் கொண்டு வந்து வடக்கிலும் மாகாண சபைத் தேர்தலை மகிந்த ராஜபக்ச நடத்தி இருந்தார். ஆனால் அவருக்குப் பிறகு வந்த ஜனாதிபதிகளால் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாமல் உள்ளது. இது வெட்கக்கேடான விடயமாகும்.
அதிகாரத்துக்காக கொள்கையைக் கைவிடும் கட்சி அல்ல எமது கட்சி. தேர்தலில் வென்றாலும், தோற்றாலும் கொள்கைகளை கைவிட்டது கிடையாது. சில கட்சிகள் தேர்தல் வெற்றிக்காக தமது கொள்கையை மாற்றுகின்றன.
அதேபோல பொய்களையும் கூறுகின்றன. இப்படியான கட்சிகளுக்கு அழிவு நிச்சயம். செய்யக்கூடிய விடயங்களை மட்டுமே எமது கட்சி கூறி வருகின்றது. 13ஆவது திருத்தத்தைத் தருகின்றோம், அதைத் தருகின்றோம், இதைத் தருகின்றோம் என எம்மாலும் கூறி இருக்க முடியும்.
ஆனால், நாங்கள் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. 13ஆவது திருத்தத்தைத் தருவோம் என்று கூறியவர்களால், வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த இயலவில்லை” எனக் கூறியுள்ளார்.