ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை (Coral Colony) குடிமக்கள் விஞ்ஞானிகளான (Citizen Scientists) தாய் மற்றும் மகள் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 111 மீட்டர் (364 அடி) நீளமும், 3,973 சதுர மீட்டர் பரப்பளவும் கொண்ட இந்த ‘பாவோனா கிளாவஸ்’ (Pavona clavus) வகை பவளப்பாறை, ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்திற்குச் சமமானது என ‘சிட்டிசன்ஸ் ஆஃப் தி ரீஃப்’ (Citizens of the Reef) அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பைச் சோஃபி கல்கோவ்ஸ்கி-போப் மற்றும் அவரது தாயார் ஜான் போப் ஆகியோர் நிகழ்த்தியுள்ளனர். கடல்சார் செயல்பாட்டு ஒருங்கிணைப்பாளரான சோஃபி மற்றும் நீருக்கடியில் புகைப்படக் கலைஞரான அவரது தாயார், ஒரு வாரத்திற்கு முன்னதாக மேற்கொண்ட டைவிங்கின் போது இந்த விசித்திரமான அமைப்பைக் கண்டுள்ளனர். பின்னர் முறையான அளவீட்டு உபகரணங்களுடன் திரும்பிய அவர்கள், இந்த J-வடிவ பவளப்பாறையை 3D மாதிரியாக்கம் மூலம் உறுதிப்படுத்தினர். ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு நீந்தவே அவர்களுக்கு மூன்று நிமிடங்கள் பிடித்ததாக சோஃபி வியப்புடன் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய வெப்பமடைதல் மற்றும் கடல் வெப்பநிலை உயர்வு காரணமாக உலகின் 80% பவளப்பாறைகள் நிறமிழந்து (Bleaching) அழியும் நிலையில், இந்தப் பிரம்மாண்ட பவளப்பாறை மிகவும் ஆரோக்கியமாக இருப்பது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்பகுதியில் நிலவும் வலுவான நீரோட்டங்கள் மற்றும் புயல் அலைகளின் குறைவான தாக்கம் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. தேவையற்ற மனிதத் தலையீடுகள் மற்றும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக, இந்த பவளப்பாறை அமைந்துள்ள சரியான இடத்தை வெளியிடப்போவதில்லை எனச் சூழலியல் அமைப்புகள் தீர்மானித்துள்ளன.
‘கிரேட் ரீஃப் மக்கள் தொகை கணக்கெடுப்பு’ (Great Reef Census) என்ற கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. இது குறித்துப் பேசிய சிட்டிசன்ஸ் ஆஃப் தி ரீஃப் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ரிட்லி, “ஆயிரக்கணக்கான குடிமக்கள் விஞ்ஞானிகளின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே இவ்வளவு பெரிய அளவிலான தரவுகளைச் சேகரித்து கடலைப் பாதுகாக்க முடியும்” எனத் தெரிவித்தார். எதிர்காலத்தில் இந்தப் பவளப்பாறையின் வளர்ச்சியைக் கண்காணிப்பதன் மூலம், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் பவளங்களின் திறன் குறித்த முக்கிய தகவல்களைப் பெற முடியும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

