திருகோணமலை, தம்பலகாமம் – அரபா நகர் பகுதியில் நிலவும் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அண்மைய நாட்களாக குரங்குகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
தம்பலகாமம் அரபா நகர் பள்ளிவாசலில் பணியாற்றும் முஅத்தின் (பணியாளர்), நேற்று (05) பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருந்தபோது குரங்கு ஒன்றினால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான அவர், உடனடியாகக் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதே குரங்கால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனும் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு இது குறித்து பலமுறை அறிவித்தும், அவர்கள் இதுவரை எவ்வித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அரபா நகர் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குரங்குகளின் பயம் காரணமாக மக்கள் வீதிகளில் நடமாட அஞ்சுகின்றனர்.பள்ளிவாசலுக்குச் சென்று தமது மதக் கடமைகளை நிறைவேற்றுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
காட்டுப் பகுதிகளில் இருந்து ஊருக்குள் புகுந்துள்ள இந்தக் குரங்கைப் பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் உடனடியாக முன்வர வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.