துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
முன்னதாக வழங்கப்பட்ட அவகாசம் முடிவடையவிருந்த நிலையில், தற்போது 2026 ஜனவரி 31 ஆம் திகதி வரை அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்துக்கொள்ள முடியும். துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வைத்துள்ள தனிநபர்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் இந்தச் சலுகை பொருந்தும்.
நாட்டில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, உரியக் காலப்பகுதிக்குள் அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க முடியாமல் பொதுமக்கள் எதிர்நோக்கிய சிரமங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சு விளக்கியுள்ளது.
குறித்த கால அவகாசத்திற்குள் அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கத் தவறுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

