சமீபகாலமாகப் பெண்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது அதிகரித்து வருவதாகவும், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்கள் எமது குழந்தைகளையும் அபாயத்துக்கு உள்ளாக்குகிறது என்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
நேற்று (நவம்பர் 23) கெஸ்பேவ நகரசபை அரங்கில் நடைபெற்ற “கர்பணி மாதா ஹரசாரா” எனப்படும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான மனநல மேம்பாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
போதைப்பொருள் பயன்பாடு குறித்த கவலைகளை வெளிப்படுத்திய அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், போதைப்பொருள் தடுப்புப் பணிகள் குறித்துப் பின்வருமாறு வலியுறுத்தினார்:
“போதைப்பொருள் தடுப்புப் பணிகள் தாய்மார்களுக்கும் பொதுவாகப் பெண்களுக்கும் கல்வியூட்டுவதன் மூலம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று நாம் கருதுகிறோம்.
குறிப்பாக, பதின்ம வயதிலுள்ள இளம் பெண்களுக்குச் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
மேலும், “அரசியல்வாதிகளுக்காக அல்லாமல், இந்த நாட்டின் குடிமக்களுக்காக முடிவுகளை எடுக்கும் ஒரு சமூகத்தை நாம் உருவாக்கி வருகின்றோம்” என்றும் அவர் கூறினார்.
“கர்பணி மாதா ஹரசாரா” – கர்ப்பிணித் தாய்மார்களுக்கான மனநல மேம்பாட்டு நிகழ்ச்சி.
இந்த முயற்சி கெஸ்பேவ நகரசபையின் தலைவர் சாமர மதும்ம கலுகேவின் கருத்தாக்கத்தின்படி, நகரசபையின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.
இதன் மூலம் 80 தாய்மார்கள் பயனடைந்தனர்.பாதுகாப்பான பிரசவத்தினை வேண்டி மகாசங்கத்தின் ஆசீர்வாதங்களுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
மகப்பேற்றுக்கு அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டன.
கொழும்பு தெற்குப் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவ நிபுணர் டாக்டர் சாமிந்த ஹுனுகும்புறவால் கர்ப்பம் மற்றும் கர்ப்பகாலப் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்வு நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர் லஷ்மன் நிப்புண ஆரச்சி, கெஸ்பேவ நகரசபை தலைவர் சாமர மதும்ம கலுகே, துணைத் தலைவர் வழக்கறிஞர் மனோத்யா கல்பயாகே, மேல் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எல்.ஏ. கலுகப்புவாரச்சி ஆகியோர் உட்பட முக்கிய அதிகாரிகள், சுகாதார நிபுணர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்

