நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், சிவில் விமானச் சேவைகளைத் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (17) நடைபெற்றது. துறைமுக மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர் ஜனக ருவன் கொடித்துவக்கு தலைமையில், சிவில் விமானச் சேவைகள் அதிகார சபையின் வளாகத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, தற்போது கையிருப்பில் உள்ள விமான எரிபொருள் (Jet A-1) அளவு மற்றும் அதன் முகாமைத்துவம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகச் சங்கிலிப் பாதிப்புகள் இலங்கையின் வான்வழிப் போக்குவரத்தைப் பாதிக்காத வண்ணம் முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் அமைச்சருக்கு விளக்கமளித்தனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு விமானச் சேவைகளின் ஸ்திரத்தன்மை மிக முக்கியமானது என்பதால், எரிபொருள் இருப்பைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன் மேலதிக விநியோகங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. விமான நிறுவனங்களுக்குத் தேவையான எரிபொருளைத் தட்டுப்பாடின்றி வழங்குவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்குப் பிரதி அமைச்சர் இதன்போது பணிப்புரை விடுத்தார்.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களைக் கருத்திற் கொண்டு, விமான எரிபொருள் முகாமைத்துவத்தில் புதிய பொறிமுறைகளை அறிமுகப்படுத்துவது குறித்தும், அவசர காலச் சூழலை எதிர்கொள்ளத் தேவையான முன்னாயத்தங்கள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டது.