இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய, கால்நடை மற்றும் காணி அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
2025 அக்டோபர் நிலவரப்படி, மில்கோ நிறுவனம் 1,490 மில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளது. இது அந்நிறுவனத்தின் வரலாற்றில் பதிவான மிக உயர்ந்த இலாபமாகும்.
முந்தைய அரசாங்கத்தினால் விற்பனை செய்யப்படவிருந்த மில்கோ நிறுவனம், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டு இலாபகரமான அரச நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை முன்னிட்டு, ஊழியர்களை ஊக்குவிக்கும் நோக்கில் போனஸ் (Bonus) வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வு நேற்று (31) நாரஹேன்பிட்டியில் உள்ள மில்கோ அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
பால் பண்ணை விவசாயிகளை வலுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் 15,000 பால் பண்ணை விவசாயிகளுக்கு இலவச ஆயுள் காப்பீட்டை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டானது மில்கோ வரலாற்றில் அதிக விற்பனை வருவாயைக் கொண்ட ஆண்டாக மாறியுள்ளதைக் குறிப்பிட்ட அமைச்சர், இதற்காக உழைத்த அனைத்து ஊழியர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.

