இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம், சாட்னா (Satna) மாவட்ட மருத்துவமனையில் தலசீமியா நோய்க்காக இரத்த மாற்று சிகிச்சை பெற்ற 6 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹீமோகுளோபின் உற்பத்தியைப் பாதிக்கும் தலசீமியா (Thalassemia) நோயால் பாதிக்கப்பட்ட 8 முதல் 12 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகள்.
மாவட்ட மருத்துவமனையில் இக்குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இரத்த மாற்று சிகிச்சையின் (Blood Transfusion) ஊடாக இந்தத் தொற்று பரவியுள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்பே இந்தத் தொற்று கண்டறியப்பட்ட போதிலும், தற்போதுதான் இந்த விபரம் பொதுவெளிக்கு வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சதீஷ் குமார் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மருத்துவமனைப் பணியாளர்களின் பாரதூரமான கவனக்குறைவு காரணமாகவே இக்குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முறையான சிகிச்சைகளை வழங்கவும், இந்த தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.