சீனாவின் ஜியாங்சு (Jiangsu) மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில், பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தையின் விரலை மருத்துவ உதவியாளர் தவறுதலாகத் துண்டித்த சம்பவம் உலகளாவிய ரீதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறுவைச் சிகிச்சை (Cesarion) மூலம் குழந்தை பிறந்த பிறகு, அதன் தொப்புள்கொடியைக் கத்தரிக்கோலால் வெட்டியபோது, மருத்துவ உதவியாளர் எதிர்பாராத விதமாகக் குழந்தையின் இடது கை விரலையும் சேர்த்து வெட்டியுள்ளார்.
தொப்புள்கொடியை வெட்டும் தருணத்தில் குழந்தை திடீரெனத் தனது கையை அசைத்ததால் இந்தத் துரதிர்ஷ்டவசமான தவறு நேர்ந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்து இரண்டு மணிநேரம் கழித்தே, குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விபரத்தை மருத்துவமனை தரப்பு அதன் தந்தையிடம் தெரிவித்துள்ளது.
துண்டிக்கப்பட்ட விரலை மீண்டும் இணைப்பதற்காக, பச்சிளம் குழந்தை உடனடியாக 300 மைல் தொலைவிலுள்ள ஒரு விசேட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு நீண்ட நேரச் சத்திரசிகிச்சைக்குப் பிறகு விரல் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கவனக்குறைவாகச் செயற்பட்ட அந்தப் பெண் மருத்துவ உதவியாளரின் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்காகப் பெற்றோரிடம் மன்னிப்புக் கோரியுள்ள மருத்துவமனை நிர்வாகம், உரிய இழப்பீடு வழங்கவும் சம்மதித்துள்ளது.

