மத்துகம பிரதேச சபை செயலாளரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த அந்த சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க, இன்று பொலிஸில் சரணடைந்ததைத் தொடர்ந்து நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மத்துகம பிரதேச சபை செயலாளர் நெலு நிஷாந்தி இத்தகொட, தவிசாளர் தன்னைத் தாக்கியதாகவும் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
காயமடைந்த செயலாளர் மத்துகம வெத்தேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றார். நேற்று பொலிஸார் தவிசாளரைக் கைது செய்யச் சென்றபோது, அவர் சபை வளாகத்திலிருந்து வெளியேறித் தலைமறைவாகியிருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் உள்ள மத்துகம பிரதேச சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க, இன்று (31) முற்பகல் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் சரணடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது. தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்கப் பதில் நீதவான் உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவம் மத்துகம பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகச் செயல்பாடுகளுக்கிடையே நிலவும் மோதல்களை வெளிப்படுத்தியுள்ளது.

