வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

image 7efc8d34a7

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் (3,59,000) ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் திங்கட்கிழமை (அக்டோபர் 20) தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சோமரட்ண விஜயமுனியின் ஆலோசனையின் பேரில், மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் விமல் பியரட்ண தலைமையிலான பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போதே இந்த மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

வவுனியா, ஏ9 வீதி ஊடாக வவுனியா நகரை நோக்கிப் பயணித்த ஒரு பொலிரோ ரக வாகனத்தை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (இ.போ.சபை) அருகில் மறித்து பொலிஸார் சோதனை மேற்கொண்டபோது, வாகனத்தில் போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த வாகனத்திலிருந்து மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரும் கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Exit mobile version