இலங்கையில் அண்மையில் அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்களுக்கு அமைய, திருத்தப்பட்ட புதிய கட்டணப் பட்டியலைப் பயணிகள் தெளிவாகப் பார்க்கும் வகையில் பேருந்துகளுக்குள் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை (RPTA) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பயணிகள் சேவை அனுமதிப்பத்திர நிபந்தனை 16 (A) இன் படி, அங்கீகரிக்கப்பட்ட கட்டண விபரங்களைக் காட்சிப்படுத்துவது சட்டபூர்வமான கடமையாகும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த மார்ச் 23 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 12.19 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 27 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், அதிகபட்ச கட்டணம் 2,422 ரூபா வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வுக்கு இணையாக இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட மேலதிகமாகப் பணம் வசூலிக்கும் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) எச்சரித்துள்ளது.
கட்டணப் பட்டியலைக் காட்சிப்படுத்தாத மற்றும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளைக் கண்டறியும் நோக்கில் போக்குவரத்து அதிகாரிகளினால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) பேருந்துகளும் இந்த நிபந்தனைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோருக்குக் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுவதுடன், தொடர்ச்சியாக விதிமீறல்களில் ஈடுபடும் பேருந்துகளின் சேவைகள் இடைநிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட மேலதிகமாக அறவிடும் பேருந்துகள் அல்லது கட்டணப் பட்டியலைக் காட்சிப்படுத்தாத பேருந்துகள் குறித்து பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும். மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபையை 011-2860860 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது 070-2860860 என்ற வட்ஸ்அப் இலக்கத்திலோ தொடர்பு கொள்ளலாம். மேலும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அவசர இலக்கமான 1955 அல்லது 071-2595555 என்ற வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாகவும் முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.