வாடகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களைப் பெற்று, அவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் பாரிய மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் இரத்தினபுரி, சன்னஸ்கம பகுதியில் வைத்துப் பலங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மிகவும் திட்டமிட்ட வகையில் இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வாகனங்களை வாடகைக்கு வழங்குபவர்களை அணுகும் இவர், சில மாதங்களுக்குத் தேவைப்படுவதாகக் கூறி மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுள்ளார்.
நீண்ட காலத் தேவை எனக் கூறி, உரிமையாளர்களிடமிருந்து அவற்றின் அசல் பதிவுப் புத்தகங்களையும் (Book) தந்திரமாகக் கேட்டுப் பெற்றுக்கொண்டுள்ளார். இவ்வாறு பெறப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பின்னர் வேறு நபர்களுக்குச் சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளார்.
இரத்தினபுரி மற்றும் பலங்கொடை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இவரால் இத்தகைய மோசடிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் கைது செய்யப்படும்போது, விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் பலங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இவரிடம் ஏமாந்த ஏனைய உரிமையாளர்கள் இருப்பார்களா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை விரிவுபடுத்தியுள்ளனர்.

