அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவரும் பிரபல வீரருமான லியோனல் மெஸ்ஸி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகை தந்த கொல்கத்தா நிகழ்வில் ஏற்பட்ட நிர்வாகக் குறைபாட்டிற்காக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்புக் கோரியுள்ளார்.
மெஸ்ஸியைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷங்களை எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
லேக் டவுன் பகுதியில் உள்ள ஸ்ரீபூமி விளையாட்டுக் கழகம் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்ட தனது உருவச் சிலையை மெஸ்ஸி காணொளி (Virtual) மூலம் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சால்ட் லேக் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு மெஸ்ஸி வருகை தந்தபோது ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
எனினும், மெஸ்ஸியைச் சுற்றி அதிகாரிகள் நெருக்கமாக இருந்ததால், அவரைக் சரியாகப் பார்க்க முடியவில்லை என்று ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதனால் அப்பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மெஸ்ஸியிடமும் ரசிகர்களிடமும் மன்னிப்புக் கோரியுள்ளார்.
“சால்ட் லேக் மைதானத்தில் இன்று நடந்த நிர்வாகக் குறைபாட்டுக்கு நான் மிகவும் வருத்தமடைந்து அதிர்ச்சியடைந்துள்ளேன். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக லியோனல் மெஸ்ஸி மற்றும் அனைத்து விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடமும் நான் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.