ஜப்பானின் மின்சாரத் துறையில் இலங்கை இளைஞர்களுக்குப் பாரிய வேலைவாய்ப்பு: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

images 15

இலங்கை இளைஞர் சமூகத்திற்கு ஜப்பானின் மின்சாரத் துறையில் (Electrical Sector) ஏராளமான வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (07) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் கையெழுத்திடப்பட்டது.

ஜப்பானின் Enterprise United Co-operative நிறுவனம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் (SLFEA) ஆகியவற்றிற்கு இடையே இந்த உடன்படிக்கை எட்டப்பட்டது.

ஜப்பான் சார்பாகத் தலைவர் கசுஹிரோ ஹன்சாகி (Kazuhiro Hanzaki) மற்றும் இலங்கை சார்பாக SLFEA தலைவர் லால் ஹெட்டியாரச்சி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஜப்பான் செல்ல விரும்புவோர் பின்வரும் தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

இலங்கையில் தேசிய தொழில் தகைமை (NVQ) பெற்ற மின்சாரத் துறை தொழிலாளராக இருத்தல் வேண்டும். 20 முதல் 28 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். க.பொ.த உயர்தரம் (A/L) வரை கல்வி கற்றிருத்தல் வேண்டும்.

ஜப்பானிய மொழி தெரிந்திருப்பது கூடுதல் தகைமையாகும். மொழித் திறன் இல்லாதவர்களுக்குத் தேவையான பயிற்சி வழங்கப்படவுள்ளது.

ஜப்பானிய மொழி மற்றும் தொழிற்பயிற்சிகள் தேசிய இளைஞர் சேவைகள் சபையின் சபுகஸ்கந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும்.

அனைத்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளும் அரசாங்கத்தின் நேரடி மேற்பார்வையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினால் (SLFEA) முன்னெடுக்கப்படும்.

தேசிய இளைஞர் சேவைகள் சபை, தொழிற்பயிற்சி அதிகார சபை, NAITA, VTA மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் வேலைவாய்ப்பு வங்கியில் பதிவு செய்துள்ளவர்களிலிருந்து தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.

இந்நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி சுதத் யாலேகம உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த ஒப்பந்தம் இலங்கை இளைஞர்களின் பொருளாதார நிலை மேம்படவும், ஜப்பானிய தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்கொள்ளவும் பெரும் வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version