லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் தீவிர மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கும், முறையான போர்நிறுத்தத்தை எட்டுவதற்குமான இராஜதந்திர முயற்சிகளில் பிரான்ஸ் தீவிரமாக இறங்கியுள்ளது. இது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், போர் பதற்றத்தைத் தணித்து அமைதியை நிலைநாட்டப் பாரிஸில் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தான் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். லெபனான் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோருடன் தான் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், லெபனான் தரப்பு இஸ்ரேலுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோதல் போக்கை உடனடியாகக் கைவிடுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை மேக்ரான் வலியுறுத்தியுள்ளார். லெபனான் மீதான பெரிய அளவிலான தரைவழித் தாக்குதல்களையும், தீவிர வான்வழித் தாக்குதல்களையும் இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அதேபோல் மோதலைத் தீவிரப்படுத்தும் “பொறுப்பற்ற” செயல்களில் ஈடுபடுவதை ஹெஸ்புல்லா அமைப்பு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். லெபனான் நாடு சீரழிந்துவிடாமல் தடுக்க அனைத்து தரப்பினரும் இராஜதந்திர வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே பிரான்ஸின் பிரதான நோக்கமாக உள்ளது.
லெபனானின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், அங்கு நீண்டகால அமைதியை நிலைநாட்டவும் இந்த இராஜதந்திர வாய்ப்பை இஸ்ரேல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மேக்ரான் வலியுறுத்தியுள்ளார். கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனானில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மனிதநேய நெருக்கடி அதிகரித்து வரும் இத்தருணத்தில், இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் என சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது.
ஈரானின் ஆதரவுடன் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல்களால், மத்திய கிழக்கு பிராந்தியமே பெரும் பதற்றத்தில் உள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த 2024 நவம்பரில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸின் மத்தியஸ்தத்தில் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்த போதிலும், தற்போது அது மீண்டும் மீறப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை இராஜதந்திரத் தீர்வைக் காண்பதற்காக பிரான்ஸ் முன்னெடுத்துள்ள இந்த முயற்சி, பிராந்திய அமைதிக்கு அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

