யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில், வவுனியா களுக்குன்னமடுவ பகுதியில் கடமையில் இருந்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை லொறியால் மோதிவிட்டு தப்பியோடிய சாரதி, இராணுவத்தினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற சிறிய ரக லொறி ஒன்றை இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
இதன்போது, லொறி சாரதி வேண்டுமென்றே பொலிஸ் அதிகாரிகளின் மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளார். இதில் அதிகாரிகள் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள் லொறியின் அடியில் சிக்கி நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சியூட்டும் காட்சி பின்னால் வந்த வாகனத்தில் இருந்த ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் வீடியோவாகப் பதிவாகியுள்ளது.
விபத்தின் பின்னர் மோட்டார் சைக்கிள் லொறியில் சிக்கிக் கொண்டதால், லொறியை வீதியிலேயே கைவிட்டு சாரதி காட்டுப் பகுதிக்குள் தப்பியோடியுள்ளார். பூஓய பாலத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாம் திசையில் ஓடிய அவரை, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த இராணுவத்தினர் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
படுகாயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட சாரதியையும் லொறியையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த ஈரட்டைபெரியகுளம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

