மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கர்பலா பிரதேசத்தில் சட்டவிரோத போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த இளைஞர் ஒருவரைக் காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ. ரஹீம் தலைமையில், புதன்கிழமை (31) மாலை முன்னெடுக்கப்பட்ட திடீர் வீதிச் சோதனையின் போது இந்தச் சந்தேக நபர் பிடிபட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய இளைஞர் ஆவார். இவரிடமிருந்து பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 84 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் நீண்டகாலமாகப் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளைக் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தப் பொலிஸார் இவ்வாறான தொடர் சுற்றிவளைப்புகளை முன்னெடுத்து வருகின்றனர்.

