பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட் (Daisy Forest), வழக்கு விசாரணைக்குத் தோன்றுவதற்குத் தகுந்த மனநிலையில் உள்ளாரா என்பதை நாளை (டிசம்பர் 11) கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி (JMO) மூலம் பரிசோதிக்கப்படவுள்ளதாகச் சட்டமா அதிபர் இன்று (டிசம்பர் 10) கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இந்த வழக்கு இன்று அழைக்கப்பட்டபோது அரச சட்டத்தரணி ஒக்ஸ்வேல்ட் பெரேரா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
முன்மொழியப்பட்ட இணக்கப்பாடுகள் குறித்துப் பரிசீலிப்பதற்காகவே வழக்கு இன்று அழைக்கப்பட்டது.
அரச சட்டத்தரணி ஒக்ஸ்வேல்ட் பெரேரா நீதிமன்றில் தெரிவிக்கையில், பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடர்புடைய மற்றொரு வழக்கில், பிரதிவாதியான டெய்சி ஃபொரஸ்ட் வழக்கு விசாரணைக்கு முகங்கொடுப்பதற்குத் தகுந்த மனநிலையில் இல்லை என அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.
அதற்கமைய, குறித்த பிரதிவாதி வழக்கு விசாரணைக்கு முகங்கொடுப்பதற்குத் தகுந்த மனநிலையில் உள்ளாரா என்பதைத் தீர்மானிப்பதற்காகக் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ஊடாக விசேட வைத்திய அறிக்கை ஒன்றைக் கோருவதற்கு உத்தரவிடப்பட்டது. அந்த நீதிமன்ற உத்தரவின்படி, பிரதிவாதி குறித்த பரிசோதனைக்காக நாளை (டிசம்பர் 11) ஆஜராகவுள்ளார்.
குறித்த பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், பிரதிவாதி வழக்கு விசாரணைக்குத் தோன்றுவதற்குத் தகுந்த மனநிலையில் உள்ளாரா என்பது குறித்து முறைப்பாட்டாளர் தரப்பு பரிசீலிக்கும் என அரச சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
குறித்த பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை வழக்கை ஒத்திவைக்குமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதிபதி, வழக்கை மீண்டும் 2026 பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார்.
2009 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிக்கும் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் முறையற்ற விதத்தில் ஈட்டப்பட்ட 59 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை, மூன்று வங்கிக் கணக்குகளில் நிலையான வைப்பில் இட்டதன் மூலம் பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டிச் சட்டமா அதிபரினால் பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

