இலங்கையை மோதல் களமாக மாற்ற அமெரிக்கா முயற்சிப்பதாக விமல் வீரவன்ச சந்தேகம்: கொழும்பில் ஊடக சந்திப்பு!

18 6

ஈரான் போர்க்கப்பல் விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இலங்கையை ஒரு நேரடி மோதல் களமாக மாற்ற அமெரிக்கா திட்டமிடுகின்றதோ என்ற அச்சம் வலுவடைந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (மார்ச் 7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இந்திய அழைப்பின் பேரில் ‘மிலான் 2026’ பயிற்சியில் பங்கேற்க வந்திருந்த ஈரானியக் கடற்படை அதிகாரிகள் குழுவை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்ததாக அவர் சந்தேகம் வெளியிட்டார்.

அமெரிக்கக் கடற்படை கடைசி நேரத்தில் அந்தப் பயிற்சியிலிருந்து விலகியமை மற்றும் இந்தியப் பிரதமர் மோடியின் இஸ்ரேல் விஜயம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய வீரவன்ச, இவை அனைத்தும் முன்னரே திட்டமிடப்பட்ட சதி எனத் தெரிவித்தார். இந்திய உளவுத்துறையான ‘ரோ’ (RAW) இந்த ஆபத்தை முன்கூட்டியே அறிந்திருந்தும், ஈரான் கப்பலை வெளியேற அனுமதித்தது இந்தியாவின் நம்பகத்தன்மை மீது கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார். மேலும், கொழும்புத் துறைமுகத்திற்கு வரவிருந்த இரண்டாவது ஈரானியக் கப்பலுக்கு அமெரிக்கத் தூதரகம் விடுத்த மிரட்டல்கள், நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவால் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சூழலில், பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டினால் குறித்த கப்பல் திருகோணமலைத் துறைமுகத்திற்கு மாற்றப்பட்டமையும், அதிலுள்ள குழுவினரை மட்டும் கொழும்புக்கு அழைப்பதென எடுக்கப்பட்ட தீர்மானமும் இராஜதந்திர ரீதியான அழுத்தங்களின் வெளிப்பாடே என அவர் சுட்டிக்காட்டினார். ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடைப்பட்ட மையப்புள்ளியாக இலங்கை அமைந்துள்ளதால், மத்திய கிழக்கில் தனது இராணுவ பலத்தை இழந்து வரும் அமெரிக்கா, இலங்கையை ஒரு புதிய இராணுவ மையமாக மாற்ற முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

இலங்கையிலுள்ள சில அரசியல் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் விடுத்த அழுத்தங்களே இத்தகைய முடிவுகளுக்கு இட்டுச் சென்றதாகவும் விமல் வீரவன்ச தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையைப் பயன்படுத்தி அமெரிக்கா தனது பிராந்திய இலக்குகளை அடைய முற்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், இத்தகைய இராஜதந்திர விளையாட்டுகள் இலங்கையை சர்வதேச மோதல் களமாக மாற்றிவிடுமோ என்ற அச்சம் நிலவுவதாக எச்சரித்தார்.

 

 

Exit mobile version