இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப்பெருக்குக்குப் பிறகு, மனிதர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணங்களுக்கு இணையாக, பாதிக்கப்பட்ட விலங்குகளின் நலனைக் கருத்திற்கொண்டு WECare Worldwide அமைப்பு பாரிய மருத்துவ உதவிகளை முன்னெடுத்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கித் தவித்த மற்றும் காயம் அடைந்த விலங்குகளுக்கு அவசர கால்நடை பராமரிப்பு வழங்க அந்த அமைப்பு உடனடியாகத் தனது குழுக்களைத் திரட்டியது. குறிப்பாக, வெள்ளக் காலங்களில் பரவக்கூடிய கொடிய நோய்களைக் கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
லெப்டோஸ்பிரோசிஸ் (எலிக்காய்ச்சல்), டிஸ்டெம்பர், பார்வோவைரஸ், ஹெபடைடிஸ் மற்றும் ரேபிஸ் (வெறிநாய்க்கடி) போன்ற நோய்கள் பரவுவதைத் தடுக்க 596 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
காயங்களுக்குச் சிகிச்சை அளித்தல் மற்றும் தோல் நோய்களைக் குணப்படுத்துதல் போன்ற 75 அத்தியாவசிய சிகிச்சைகள் களத்தில் மேற்கொள்ளப்பட்டன. மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று, மேலதிக சிகிச்சை மற்றும் உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்காக WECare மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
வெள்ள அனர்த்தத்திற்குப் பிறகு ஆதரவற்ற நிலையில் இருக்கும் விலங்குகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவது, மனிதர்களிடையே பரவக்கூடிய சில விலங்கியல் நோய்களைத் தவிப்பதற்கும் உதவும் என இவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.