அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பேரழிவு ஏற்பட்ட போதிலும், மக்களின் அசைக்க முடியாத மன வலிமையினாலும் ஒற்றுமையினாலும் இலங்கை வேகமாக மீண்டு வருகின்றது எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு ICT ரத்னதீப ஹோட்டலில் வியாழக்கிழமை (டிசம்பர் 4) நடைபெற்ற, NASSCOM மற்றும் SLASSCOM தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“எம்மீது ஒரு பலத்த அடி விழுந்திருக்கிறது, ஆயினும் நாம் வீழ்ந்துவிடவில்லை. எமது மக்கள் வியக்கத்தக்க மன உறுதியை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மேலும், அந்த உணர்வே நாம் எதிர்கொண்ட ஒவ்வொரு நெருக்கடியின்போதும் எம்மை முன்னோக்கிக் கொண்டு சென்றிருக்கின்றது,” என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார்.
இந்தியாவின் உயர்தொழில்நுட்பத் துறைசார் நிறுவனமான NASSCOM மற்றும் இலங்கையின் IT மற்றும் BPM துறைக்கான தேசியச் சபையாகிய SLASSCOM ஆகியன இந்தக் கலந்துரையாடலில் இணைந்துகொண்டன.
டிஜிட்டல்-பொருளாதார ஒத்துழைப்பு, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) எதிர்காலப் பாதை குறித்து விவாதிக்கப்பட்டது.
மத்திய கால மற்றும் நீண்ட கால இலக்காக 7% பொருளாதார வளர்ச்சியை அரசாங்கம் இலக்காகக் கொண்டிருக்கிறது. ஏற்றுமதிப் பல்வகைப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவுபடுத்தல் ஆகியவற்றுக்குத் தொழில்நுட்பப் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்.
மனித வளத்தை மேம்படுத்துதல் மூலம் 2030ஆம் ஆண்டளவில் IT மற்றும் BPM துறையின் ஏற்றுமதி மதிப்பை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மாற்றுவதற்கு இலங்கை இலக்கு வைத்துள்ளது.
மீள்குடியேற்றம், அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களை வலுப்படுத்துதல், வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய மறுசீரமைப்புப் பணிகளை வழிநடத்த, அரசாங்கம் உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் இணைந்து குறுகிய கால மற்றும் நீண்ட கால மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகிறது.
கல்வி அமைச்சினால் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள தேசியக் கல்வி முகாமைத்துவ முறைமை (National Education Management System) தொடர்பான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஏனைய அமைச்சுகளும் தமது டிஜிட்டல் மயமாக்கல் பணிகளை ஆரம்பித்து எதிர்வரும் மாதங்களில் முறைமைகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகின்றன.
அனர்த்த நிலைமைகளைக் கண்டறிதல், வரைபடமாக்கல் மற்றும் புவியியல் தரவுகளைப் பெற்றுக் கொள்ள ட்ரோன் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்மொழிவைப் பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
தற்போதுள்ள தொழில்நுட்பத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக மழையின் சரியான முன்னறிவிப்பைப் பெறுவது வரையறுக்கப்பட்டிருந்ததால், எதிர்கால அனர்த்த நிலைமைகளைச் சிறப்பாக முகாமைத்துவம் செய்வதற்கு இலங்கையின் முன்கூட்டிய எச்சரிக்கை முறைமைகளை வலுப்படுத்துவதிலும் தொழில்நுட்பத் துறையில் முதலீடுகளை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டில் NASSCOM தொழில்நுட்பம் மற்றும் தலைமைத்துவ மன்றம் , SLASSCOMஇன் அனுசரணையுடன் நடைபெறும் நிகழ்வுகளுக்கு இணையாக இந்த உத்தியோகபூர்வ விஜயம் அமைந்தது.