அம்பாறை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் பாவித்து வந்த வாகனம் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குத் சொந்தமானது என தெரியவந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கோரியிருந்த விவரங்களுக்குக் கிடைக்கப் பெற்ற பதில்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான குறித்த வாகனத்தை, கடந்த ஒரு வருட காலமாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் பாவித்து வந்துள்ளார்.
இதனையடுத்து முஷாரப் பயன்படுத்தி வந்த மேற்படி வாகனம் சில வாரங்களுக்கு முன்னர் அவரிடமிருந்து இல்லாமல் போயுள்ளது.
இந்த நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையானது, மேற்குறிப்பிட்ட இலக்கத்தையுடைய வாகனத்தை, தமக்குக் கீழ்வரும் மகநெகும வீதி நிர்மாண கம்பனிக்கு 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 04ஆம் திகதி வழங்கியதாக தெரிவித்துள்ளது.
தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பயன்படுத்தி பெறப்படும் எந்தவொரு சலுகையினையும் தான் பயன்படுத்தப் போவதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் பொத்துவிலில் உள்ள பள்ளிவாசல் ஒன்றினுள் வைத்து மக்கள் முன்பாக சத்தியம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment