பல்கலைக்கழக சட்டத்திருத்தத்தில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தன்னிச்சையான தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு தழுவிய ரீதியில் டிசம்பர் 30ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் அடையாள தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தீர்மானித்துள்ளது.
நேற்று (28) நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் வருமாறு:
புதிய சட்டத்திருத்தம் அமுலாகும் வரை நடைமுறையில் உள்ள சட்டப்படி நியமனங்கள் நடைபெற வேண்டும். ஆனால், பீடாதிபதிகள் மற்றும் திணைக்களத் தலைவர்களை நியமிக்க வேண்டாம் என உபவேந்தர்களுக்கு ஆணைக்குழுத் தலைவர் அனுப்பிய கடிதம் சட்டவிரோதமானது என ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சட்டத்திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க கல்வி அமைச்சரும் பிரதமரும் இணங்கிய போதிலும், ஆணைக்குழு அதனை அமுல்படுத்துவதில் அசமந்தப் போக்கைக் கடைப்பிடிப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற ஆணைக்குழு நடவடிக்கை எடுக்காமை.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் எம். ஏ. எம். சமீம், சர்ச்சைக்குரிய இரண்டு கடிதங்களையும் உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், இந்த ஒரு நாள் அடையாளப் போராட்டம் தொடர்ச்சியான தொழிற்சங்கப் போராட்டமாக உருவெடுக்கும் என எச்சரித்துள்ளார்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாளை மறுதினம் நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்விச் செயற்பாடுகளும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.