இலங்கை தொடர்பில் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றம்

20 1

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த மாத ஆரம்பத்தில் இந்தப் பிரேரணையின் முதலாவது வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன.

அந்தவகையில், திருத்தப்பட்ட இறுதி வரைபு இன்று சமர்ப்பிக்கப்பட்டு, இன்றைய தினமே வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

இலங்கை மீதான மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரத்தை நீடிக்கும் தீர்மானத்திற்கு, அதனை இன்று முன்வைத்த பிரதான 5 நாடுகளுக்கும் மேலாக மேலும் 22 நாடுகள் இணை அனுசரணை வழங்கி இருந்தன.

பிரித்தானியாவின் தலைமையில், கனடா, மாலாவி, மொன்டினீக்ரோ மற்றும் வட மசிடோனியா ஆகிய இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்ட இந்தப் புதிய பிரரேணையின் முதலாவது வரைபு கடந்த செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இந்தப் பிரரேணை நிறைவேற்றப்படும் போது இலங்கை அரசாங்கம் வாக்கெடுப்பைக் கோராமல் இருக்க முடிவு செய்து இருந்தது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி ஆரம்பமானது. இந்நிலையில், நாளை மறுதினம் ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதியுடன் கூட்டத்தொடர் நிறைவடைகின்ற நிலையில் அதற்கு முன்னதாக இன்றையதினம் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால், இலங்கை அரசாங்கம் இந்த பிரேரணையையும் சர்வதேச தலையீட்டடையும், தொடர்ந்து மறுத்து வருகிறது. இதேவேளை, இந்தத் தீர்மானம் நிகழ்ச்சி நிரல் 2-இன் கீழ் இருப்பதால், தமிழ்த் தரப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஐ.நா.சபையிடமும், குறிப்பாக மையக் குழு நாடுகளிடமும் இலங்கைக்கு விசேட அறிக்கையாளரை (country specific spécial rapporteur) நியமிக்க அழுத்தம் கொடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version