ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை: இலங்கை உட்பட 5 நாடுகளில் பேரழிவு – 1,600 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

images 5 1

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதி முழுவதும் பல ஆண்டுகளுக்குப் பிறகு பதிவான மிக மோசமான காலநிலையால் 5 நாடுகளில் 1,600இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (UN) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் நடுப்பகுதியில் இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் வெப்ப மண்டலப் புயல்கள் மற்றும் தீவிரமடைந்த பருவமழை காரணமாகப் பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டன.

இந்தப் பிராந்தியம் முழுவதும் 11 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 1.2 மில்லியன் பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) கூற்றுப்படி, காலநிலை பேரிடர்களால் சிறுவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நவம்பர் இறுதிக்குள் 4.1 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்களின் கல்வி தடைப்பட்டுள்ளது.

வியட்நாமில் சுமார் 3 மில்லியன் மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்ல முடியவில்லை. பிலிப்பைன்ஸில் கிட்டத்தட்ட 1 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்தச் சமீபத்திய பேரிடர், ஆசியப் பிராந்தியத்தில் காலநிலை மாற்றத்தின் தீவிர தாக்கத்தை எடுத்துரைப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

Exit mobile version