இலங்கை மீட்பு நடவடிக்கைகளுக்காக CERF நிதியிலிருந்து ஐ.நா. 4.5 மில்லியன் டொலர்களை ஒதுக்கியது!

25 69360fc20e3c2

‘டிட்வா’ புயல் மற்றும் அதனைத் தொடர்ந்த அனர்த்தங்களால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபை (UN) இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்காகத் தனது மத்திய அவசரகால மீட்பு நிதியிலிருந்து 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூபாயில் சுமார் 1.38 பில்லியன்) ஒதுக்கியுள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உணவு விநியோகம், தங்குமிடம் ஆதரவு, நீர், சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட அவசர உதவிகளை விரைவாக அதிகரிக்க இந்த நிதியுதவி உதவும்.

இந்த நிதி ஒதுக்கீடு குறித்து இலங்கையில் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) கூறுகையில்:

“இந்த நிதி இலங்கைக்கு ஒரு முக்கியமான தருணத்தில் வருகிறது. ‘டித்வா’ சூறாவளி நாடு முழுவதும் வாழ்க்கையை நிலைகுலையச் செய்துள்ளது, மேலும் பல குடும்பங்கள் தங்கள் அடிப்படை அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போராடி வருகின்றனர். இந்த அவசர நிதி, மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் ஆதரவை அடைய உதவும்.”

அத்துடன், ஐ.நா. அரசாங்கம், சிவில் சமூகக் கூட்டாளிகள் மற்றும் மனிதாபிமான சமூகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி, ஒருங்கிணைந்த பதிலை உறுதி செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய மதிப்பீடுகள் சூறாவளியின் விளைவுகள் ஆரம்பத்தில் புரிந்துகொள்ளப்பட்டதை விடப் பரந்ததாகவும் கடுமையானதாகவும் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட விரிவான சேதம் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னும் இடம்பெயர்ந்துள்ள நிலையில், பலர் முழுமையாக மீள்வதற்கு நிலையான ஆதரவு அவசரமாகத் தேவைப்படுகிறது.

Exit mobile version