யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாவடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில், நேற்றைய தினம் (09.05.2025) இரவு திருமஞ்ச திருவிழா இடம்பெற்றது.
திருவிழாவிற்காக தென்னிலங்கையில் இருந்து இரு யானைகள் அழைத்து வரப்பட்டு இருந்தன. மஞ்ச திருவிழாவின் போது, மஞ்சத்திற்கு முன்பாக இரு யானைகளும் அழைத்து வரப்பட்டன.
அவ்வேளை வெடிகள் கொளுத்தப்பட்டு, தீப்பந்த விளையாட்டுக்கள் இடம்பெற்றன.
அதன்போது யானைகளில் ஒன்று மிரண்டதில் , அருகில் நின்ற இருவர் காயமடைந்துள்ளனர் காயமடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
ஆலய திருவிழாக்களுக்கு யானைகளை அழைத்து வருவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில், உரிய அனுமதிகள் இன்றி யானைகள் அழைத்து வரப்படுகின்றன.
அவ்வாறான நிலைகளில் யானைகள் மிரண்டாலோ, யானைகளுக்கு மதம் ஏற்பட்டாலோ அதனை கட்டுப்படுத்த முடியாத நிலைமைகள் ஏற்பட்டால் உயிரிழப்புக்கள் ஏற்படும் அபாயங்கள் உள்ளதனால், யானைகளை அழைத்து வருவதற்கு உரிய அனுமதிகள் ஊடாக கட்டுப்பாடுகள் விதிக்க வடமாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.