மட்டக்களப்பில் சோகம்: இருவேறு விபத்தில் 15 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு!

accident

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் மற்றும் சந்திவெளி பகுதிகளில் கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற இருவேறு வீதி விபத்துகளில் 15 வயதுச் சிறுவன் மற்றும் 19 வயது இளைஞர் உட்பட இருவர் உயிரிழந்ததுடன், 2 பேர் படுகாயமடைந்த சோக சம்பவம் நேற்று (திங்கட்கிழமை, டிசம்பர் 15) மாலைவேளை இடம்பெற்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனையில் இருந்து சந்திவெளி நோக்கிப் பயணித்த கனரக வாகனத்துடன், அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் கிரான் பிரதான வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய சுரேந்திரன் கிறசன் என்ற இளைஞன் உயிரிழந்தார். இந்த விபத்துத் தொடர்பாகக் கனரக வாகனச் சாரதியை வாழைச்சேனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சந்திவெளி காவல் துறை பிரிவிலுள்ள பாலையடித்தோணா பகுதியில், 16 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்றுள்ளனர். வேக கட்டுப்பாட்டை மீறி வீதியில் இருந்த மின்கம்பத்துடன் மோதி ஏற்பட்ட விபத்து இதுவாகும்.

இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய ஜெயசீலன் ஜெதுசன் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த 14 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்துகள் குறித்து அந்தந்தக் காவல் நிலையப் போக்குவரத்துப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version