நாட்டில் 2029 வரை பொருளாதார நெருக்கடி! – வர்தகத்துறை அமைச்சர்

பந்துல குணவர்தன

நாட்டில் 2029ஆம் ஆண்டு வரை பொருளாதார நெருக்கடி தொடரும் என வர்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாதத்தில் பங்கேற்ற அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது தாக்குப்பிடிக்க முடியாத அளவு கடன்களுக்குள் நாம் மூழ்கியுள்ளோம்.

இதனை சமாளிக்க 2029ஆம் ஆண்டு வரையில் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடன் நெருக்கடி, அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாது போனமை மற்றும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் காரணமல்ல.

கடந்த அரசாங்க காலங்களில் முன்னெடுக்கப்பட்ட தவறான வெளிநாட்டு கொள்கைகள் மற்றும் கொவிட் தொற்றால் ஏற்பட்ட நெருக்கடிகளுமே காரணம்.

நாடு பெரும் அந்நிய செலாவணி நெருக்கடி நிலைக்கு முகம் கொடுத்து வருகின்றது. இதற்கு வெறுமனே கொரோனா வைரஸ் பரவல் காரணம்  என கூற முடியாது.

கடந்த 1977ஆம் ஆண்டிலிருந்து கையாளப்பட்ட திறந்த பொருளாதார கொள்கையின் தாக்கம், அதன் பின்னரான தேசிய உற்பத்தி மீதான குறைந்த நம்பிக்கை மற்றும் உற்பத்திகளை குறைத்து, இறக்குமதியை மாத்திரமே நம்பியமை போன்றவையோ தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணிகளாக அமைகின்றன.

இவற்றின் காரணமாக தாக்குப் பிடிக்க முடியாத அளவு அபிவிருத்திக் கடன்கள் பெறப்பட்டுள்ளன.அதன்படி 2029ஆம் ஆண்டு வரையில் இந்த நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என வர்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version