யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விஹாரை அமைந்துள்ள காணி தொடர்பான பிரச்சினைக்கு முறையான தீர்வு எட்டப்படும் வரை, அங்கு எவ்விதமான புதிய கட்டுமானப் பணிகளும் முன்னெடுக்கப்படமாட்டாது என விஹாராதிபதி ஜின்தோட்டே நந்தாராம தேரர் உறுதியளித்துள்ளார்.
இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் முன்வைத்த பிரதான கருத்துக்கள் காணி விவகாரம் தொடர்பாக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய குழுவின் விசாரணை முடிவுகள் வரும் வரை, விஹாரை வளாகத்தில் புதிய கட்டுமானங்கள் எதுவும் செய்யப்படமாட்டாது.
எதிர்வரும் பௌர்ணமி தினத்தில் (ஜனவரி 3) தெற்கிலிருந்து புத்தர் சிலை கொண்டுவரப்படுவதாகவோ அல்லது விசேட பெரஹரா நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளதாகவோ பரவும் செய்திகளில் உண்மையில்லை. அன்றைய தினம் வழமையான பூஜைகள் மட்டுமே நடைபெறும்.
விஹாரை அமைந்துள்ள இடம் சட்டவிரோதமானது என அரசாங்கக் குழு தீர்ப்பளித்தால், அந்தத் தீர்ப்பை ஏற்கத் தான் தயாராக இருப்பதாக அவர் பகிரங்கமாக அறிவித்தார்.
விஹாரை அமைந்துள்ள தனியார் காணிகள் தொடர்பான ஆவணங்கள் ஏற்கனவே அரசாங்கக் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, காணிக்கு உரிமை கோரும் தரப்பினரும் தங்களது ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
“அரசியல் நோக்கங்களுக்காகக் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம். அரசாங்கக் குழுவின் விசாரணைகளுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்,” என விஹாராதிபதி இதன்போது கோரிக்கை விடுத்தார்.
தற்போது வரை காணி விடுவிப்புத் தொடர்பாக எவரும் தன்னுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், அரசாங்கக் குழுவின் இறுதி முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

