கணவனை தேடி வந்த கும்பலால் சரமாரியாக தாக்கப்பட்ட மனைவி
வவுனியா – தோணிக்கல் பகுதியில் வாள் வெட்டு மற்றும் தீ வைக்கப்பட்ட சம்பவத்திற்கு இலக்காகி 21 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் கணவனைத் தேடிச் சென்ற குழுவே தாக்குதல் நடத்தியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
முகத்தை மூடிக்கட்டிக் கொண்டு திடீரென உள்நுழைந்த கும்பல், அங்கிருந்தவர்களைச் சரமாரியாக வெட்டியதுடன், அனைவர் மீதும் பெட்ரோல் ஊற்றியுள்ளனர்.
“எங்கே சுகந்தன்” என தேடியபடியே அந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது வீட்டின் மேல்மாடியில் இருந்த சுகந்தன் என்ற குடும்பஸ்தர் கீழே இறங்கி வந்தபோது, அவரை குறித்த கும்பல் வெட்ட முயற்சித்த நிலையில், கணவனைக் காப்பாற்றக் குறுக்கே சென்ற 21 வயதான மனைவி சரமாரியான வெட்டுக்காயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.
இதன் பின்னர் அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ மூட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 21 வயதான பாத்திமா என்ற இளம் குடும்ப பெண் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை கணவன் உயிராபத்தான காயங்கள், எரிகாயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.
அத்துடன், 2 வயதுடைய சிறுவன் மற்றும் 7, 8 ,13 ஆகிய வயதுகளுடைய மூன்று சிறுமிகள், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட நான்கு பெண்கள், 42 வயதுடைய ஆண் மற்றும் 36 வயதுடைய ஒருவரும் தீயில் சிக்கிக் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த நபர்களுக்கு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையி சிகிச்சைகள் வல்ழங்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தடயவியல் பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், திடீர் மரணவிசாரணை அதிகாரி ம.கோகுல்சங்கர் மற்றும் பதில் நீதிபதி ஆர்த்திகா தயாபரன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தடயங்களைப் பார்வையிட்டுள்ளனர்.
வவுனியா – தோணிக்கல் பகுதியில் வாள் வெட்டு மற்றும் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் இலக்காகி இளம் குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
மேலும் 9 பேர் வெட்டு மற்றும் எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றையதினம் (23.07.2023) அதிகாலை குறித்த வீட்டிற்குள் உள்நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டின் உரிமையாளர் மீது வாள்வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து காயமடைந்த நபர் வீட்டிற்குள் ஓடிச்சென்றுள்ளார்.
அவரை பின்தொடர்ந்த குழுவினர், வீட்டிற்குள் சென்று அங்கிருந்த பெண்கள் உட்படப் பலர் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், வீட்டிற்கு தீ வைத்துவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் வீட்டில் இருந்த இளம் குடும்ப பெண் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகியநிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
அவரது கணவர், சிறுவர்கள் பெண்கள் உட்பட 9 பேர் வெட்டு மற்றும் எரிகாயங்கள் அடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள்
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் வீட்டின் முன்பாக அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடித் திரிவதை வீட்டின் உரிமையாளர் அவதானித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அங்கு வசிக்கும் சிறுமி ஒருவருக்கு இன்று அதிகாலை பிறந்த நாள் நிகழ்வொன்றும் சிறியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.