தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவை தங்கால்லை பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்ட நிலையில், அவர் செல்லாமல் ஒளிந்துதிரிவதாக பிரதியமைச்சர் சுனில் வட்டகல நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
விளையாட்டில் ஊக்கப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இதன்போது தொடர்ந்து பேசிய அவர்,
புவக்தண்டாவே சனாவின் வீட்டில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உணவு உட்கொண்டார் என்று ஊடக மாநாட்டில் தெரிவித்தவர் அது தொடர்பான விபரங்களை பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்காமல் ஒளிந்துள்ளார்.
எல்லாம் அப்பட்டமான பொய்கள். சிலர் தான் ஜே.வி.பியில் இருந்ததாக பழைய கதைகளை சொல்லி திரிகின்றனர். அவர்களே ஜே.வி.பியை பெரும் அவமானத்திற்கு உள்ளாக்கியவர்கள்.
இன்னொருவர் தனது ஓய்வூதியம் இல்லாமல் போகும் என்று இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ஜே.வி.பியின் சட்டக்குழுவில் பதவி வகித்ததாக சொல்கின்றார். ஆனால் அது தொடர்பான ஆவணங்களை காண்பிக்குமாறு கோரியதும் வாயடைத்து போயுள்ளார். இவ்வாறானவர்கள் வானம் பிளக்கும் பொய்களையே கூறுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.