வடக்கு காணிகள் தொடர்பான வர்த்தமானி! தற்காலிக இடைநிறுத்தத்திற்கு சுமந்திரன் எதிர்ப்பு

8 26

வடக்கு மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானியை தற்காலிகமாக இடைநிறுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கையானது ஒருபோதும்  நிரந்தர தீர்வை பெற்றுத்தராது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் தற்காலிக இடைநிறுத்தல் நடவடிக்கை குறித்து கருத்து முன்வைக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

மேலும்,  அவ்வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக மீளப் பெறப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு இந்த வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாத காலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

அதனை உடனடியாக மீளப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

அதனையடுத்து அவ்வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசாங்கம் அறிவித்தது.

இருப்பினும் எவரேனும் காணிகளுக்கான உரிமையை நிறுவுவதற்குத் தவறும் பட்சத்தில் அல்லது காணிகளுக்கு உரிமை கோராதவிடத்து, அக்காணிகள் கட்டாயமாக அரசுடைமையாக்கப்படவேண்டும் என காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 5 (1) ஆம் பிரிவில் வலியுறுத்தப்பட்டிருப்பதாக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version