இராணுவப் பயிற்சிகளை நிறைவு செய்த இலங்கை மற்றும் அமெரிக்க படைகள்
அமெரிக்காவின் பசுபிக் கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான 2024ஆம் ஆண்டின், ஒத்துழைப்பு மிதவை தயார்நிலை மற்றும் இருதரப்பு பயிற்சி நிறைவடைந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகிய CARAT – 2024 என்ற இந்த பயிற்சி நேற்று முன் தினம்(26) முடிவடைந்துள்ளது.
கடற்படைத் தலைமையகம், விசேட படகுப் படைத் தலைமையகம், கடற்படை கப்பல்துறை மற்றும் திருகோணமலை உப்பாறு மற்றும் கொழும்பில் உள்ள களங்கரை விளக்கம் ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலக கெமாண்டர் சான் ஜின் மற்றும் இலங்கை கடற்படையின் பதில் பணிப்பாளர் கெப்டன் உபுல் சமரகோன் ஆகியோரின் அனுசரணையில், இருதரப்பு பயிற்சியின் நிறைவு நிகழ்வு, திருகோணமலை- சம்பூரில் உள்ள கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.
CARAT 2024 பாதுகாப்பு பயிற்சியின் போது, பணயக்கைதிகளை மீட்பது, கைது செய்யப்பட்டவர்களை கையாளுதல், கண்காணிப்பு, ஆயுதம் கையாளுதல், இலங்கையின் பூர்வீக தாவரங்களை காட்சிப்படுத்துதல், பாம்புகளை கையாளுதல், சிறிய ஆளில்லா விமான அமைப்புகளுடன் வெடிக்கும் ஆயுதங்களை அகற்றும் பயிற்சிகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுப்பயிற்சிகள் ஆகியவை அடங்கியிருந்தன.
அத்துடன் கொழும்பில் உள்ள களங்கரை விளக்க மண்டபத்தில் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கு ஒன்றும் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.