வெனிசுலாவின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும்: அமெரிக்க நடவடிக்கைக்கு இலங்கை அரசு எதிர்வினை!

unhrc

வெனிசுலா மீதான அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைது விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை இன்று அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்டங்களின்படி, உலகின் அனைத்து நாடுகளினதும் இறையாண்மை மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். உறுப்பு நாடுகள் அனைத்தும் இந்த விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வெனிசுலா விவகாரம் தொடர்பாக நாளை (05) நடைபெறவுள்ள ஐநா பாதுகாப்புச் சபையின் (UNSC) அவசரக் கூட்டத்தைத் தாமதமின்றி நடத்துமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

ஐநா சாசனத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாகச் செயற்படும் நாடுகள் குறித்து ஐநா பொதுச்சபையிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது இலங்கையின் நிலைப்பாடாகும்.

மக்கள் விடுதலை முன்னணி வெளியிட்ட கண்டன அறிக்கை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்.

அரசியல் கட்சிகள் தமது கொள்கைகளின் அடிப்படையில் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கலாம். ஆனால், அரசாங்கம் என்பது நாட்டின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்டமைப்பு. எனவே, ஒரு அரசியல் கட்சியின் கருத்தும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடும் வெவ்வேறானவை.

இந்த விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் மிகவும் நிதானமாகவும், சர்வதேச இராஜதந்திர விதிகளுக்கு உட்பட்டும் தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version