நல்லிணக்கம் தொடர்பான கடப்பாட்டை நிறைவேற்றுவதை முன்னிறுத்திப் பயணிக்கும்போது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்தவேண்டியது அவசியம் என்று இலங்கையை வலியுறுத்தியிருக்கும் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள், தேர்தல் முறைமை தொடர்பில் வாக்காளர்களின் நம்பிக்கையைப் பேணுவதன் ஊடாக நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்குமாறும் அழைப்புவிடுத்துள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், அன்றைய தினம் தொடக்கவுரை ஆற்றிய மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க், இலங்கைக்குக் கடந்த ஒரு தசாப்தகாலமாக விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட ஆணையாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்த பிரிட்டன், கனடா, ஜேர்மனி, வடமெசிடோனியா, மாலாவி மற்றும் மொன்டெனேக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகளின் சார்பில் மனித உரிமைகளுக்கான பிரிட்டனின் சர்வதேச தூதுவர் ரீட்டா ஃப்ரென்ச் இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் குறித்து பேரவையின் அமர்வில் உரையாற்றுகையிலேயே மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
காணி விடுவிப்பு, நீண்டகாலத் தடுத்துவைப்பு மற்றும் ஊழல் மோசடிகள் என்பன தொடர்பான கரிசனைகள் குறித்து இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள முதற்கட்ட நடவடிக்கைகளை வரவேற்கின்றோம். இந்த நடவடிக்கைகள் இலங்கையின் சகல இன, மத சமூகங்களைச்சேர்ந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான செயன்முறையை ஆரம்பிப்பதற்கான அடிப்படையை வழங்கும்.
அடுத்ததாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் தொடர்ச்சியான பிரயோகம் குறித்த எமது கரிசனை மாற்றமின்றித் தொடர்கின்றது.
பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்குத் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளை அங்கீகரிக்கும் அதேவேளை, பயங்கரவாதம் தொடர்பான சட்டமானது இலங்கை கொண்டிருக்கும் சர்வதேசக் கடப்பாடுகளுக்கு அமைவாகக் காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.
அதேபோன்று கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறும் நாம் அரசாங்கத்தைக் கோருகின்றோம்.
இலங்கை நல்லிணக்கம் தொடர்பான கடப்பாட்டை நிறைவேற்றுவதை முன்னிறுத்திப் பயணிக்கும்போது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்தவேண்டியது அவசியம். அதேவேளை மோதல் ஏற்படுவதற்கு வழிவகுத்த அடிப்படைக்காரணிகளை சீரமைப்பதற்கான பரிந்துரைகள் மற்றும் கடந்தகால செயற்திட்டங்கள் என்பன அர்த்தமுள்ள விதத்தில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
இலங்கை அரசாங்கம் தேர்தல் முறைமை தொடர்பில் வாக்காளர்களின் நம்பிக்கையைப் பேணுவதன் ஊடாக நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதும், நாட்டின் முக்கிய கட்டமைப்புக்கள் மற்றும் ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துவதும் இன்றியமையாததாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கும் அவரது அலுவலகத்திற்கும் உரியவாறான ஒத்துழைப்பை வழங்குமாறு இலங்கையை வலியுறுத்துவதுடன், மனித உரிமைகள் பேரவையின் 51ஃ1 தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment