காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களால் சிறுவர்கள் இடம்பெயர்வதில், தெற்காசியாவில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் பிராந்திய அறிக்கை தெரிவித்துள்ளது.
2016 முதல் 2022 வரையான ஏழு ஆண்டுகளில், இலங்கையில் சுமார் 2 இலட்சத்து 80 ஆயிரம் சிறுவர்கள் (மொத்த சிறுவர் சனத்தொகையில் 4.6%) இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்திய மற்றும் பங்களாதேஷுக்கு அடுத்தபடியாக இலங்கை உள்ளது. புயல்கள் (54%) மற்றும் வெள்ளப்பெருக்கு (44%) ஆகியவை இலங்கையில் சிறுவர்கள் இடம்பெயர முக்கிய காரணங்களாக உள்ளன.
2016ஆம் ஆண்டு ஏற்பட்ட ‘ரோனு’ சூறாவளியால் மட்டும் 141,000 சிறுவர்கள் இடம்பெயர்ந்தனர். முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட வெளியேற்ற நடைமுறைகள் காரணமாகவே உயிர் சேதங்கள் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் சுட்டிக்காட்டியுள்ளது.
இடம்பெயர்வு அபாயத்தை எதிர்கொள்ளும் சிறுவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய, அரசாங்கங்கள் மற்றும் பங்காளிகள் இணைந்து செயல்பட வேண்டும் என யுனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.