இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் நிலவும் பதற்ற நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(08.05.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் சூழ்நிலையின் வளர்ச்சி குறித்து வெளியுறவு அமைச்சகம் விழிப்புடன் உள்ளதோடு இது சம்பந்தமாக அரசாங்கத்திற்கு விளக்கமும் அளித்து வருகின்றது.
அரசாங்கத்தின் கொள்கை தீர்மானத்தின்படி, இந்தியப் பெருங்கடலில் புவிசார் அரசியல் மோதல்களில் இலங்கை ஈடுபடாது.
அத்துடன், நாங்கள், எங்கள் இறையாண்மையைப் பாதுகாக்கும் அதே வேளையில், அணிசேரா கொள்கையில் செயற்படுகிறோம்.
எந்தவொரு வகையான பயங்கரவாதத்தையும் நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கவோ ஆதரிக்கவோ மாட்டோம். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் முயற்சியில் எந்த நேரத்திலும் ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

