விசாரணைகளை குழப்பும் எதிரணியினர்! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விசனம்

18 5

இலங்கையில் ஊழல், மோசடிகள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ஒவ்வொருவராகக் கைது செய்யப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில், ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றன. முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளைக் குழப்புவதே அவர்களின் நோக்கமாகும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலஞ்ச, ஊழல் தொர்பான விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அவரால் பதிலளிக்கப்பட்டுள்ளது. செயற்பாட்டு ரீதியில் அவர் அவரது நடவடிக்கைகளை நாட்டுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

எனவே, இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லை. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு இது குறித்த சட்டம் தொடர்பில் அனுபவம் இருப்பதாக நம்புகின்றோம்.

அதற்கமைய நாடாளுமன்றத்தில் அரசமைப்பு சபையின் ஊடாக இடம்பெற்ற தேர்வு மோசடியானது என்றால், அந்த நியமனத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியும். அதுவே சரியான அணுகலாகும். அதனை விடுத்து ஆங்காங்கு விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லை.

ஊழல், மோசடிகள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ஒவ்வொருவராகக் கைது செய்யப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில், இலஞ்ச, ஊழல் தொர்பான விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் மீது அவதூறு பரப்புவதன் ஊடாக, கம்மன்பில போன்றோரின் தேவை என்ன என்பது தெளிவாகின்றது. இலஞ்ச, ஊழல் குறித்த விசாரணைகளைக் குழப்புவதே இவர்களின் நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version