பத்து வருடங்களாக தீர்க்கப்படாத பண மோசடி!
கொழும்பு-அவிசாவளை தேர்தல் தொகுதியின் கிழக்கு ஹேவாகம் பிரிவின் கிராமிய வங்கி கிளைகளில்,10 வருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற பண மோசடிக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் பலநோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கி 24 கிளைகளில் 100,000 இற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் 5,400 இலட்சம் ரூபா வைப்புத்தொகையை என்ட்ரஸ்ட் என்ற நிறுவனம் மோசடியாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(05.03.2024) உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், 2021 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி நிலையியற் கட்டளையின் கீழ் இது தொடர்பாக துறைக்குப் பொறுப்பான அமைச்சர் அவரிடம் வினவியபோது அவர் அளித்த பதில் திருப்திகரமானதாக அமையவில்லை.
இந்த பிரச்சினை பிரதமருக்கு கூட தெரியும் என்பதுடன், இவ்வாறான நிலையில் என்ட்ரஸ்ட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பிரச்சினைக்குரிய விடயமாகும்.
மேலும் இந்த என்ட்ரஸ்ட் எனப்படும் நிறுவனத்துடன் சில பிரபலங்களுக்கு தொடர்புகள் இருப்பதால், இது தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.
ஆகவே,இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து வைப்பாளர்களுக்கு பணத்தை வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.