இரா.சம்பந்தனின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்வதற்கு விசேட போக்குவரத்து: சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு
இரா.சம்பந்தனின் (R. Sampanthan) இறுதிக்கிரியையில் கலந்து கொள்வதற்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் இறுதி அஞ்சலி நிறைவின் பொழுது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சம்பந்தனின் பூதவுடல் இன்று (4) காலை மார்டின் வீதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு தொடர்ந்து தந்தை செல்வா அரங்கத்திற்கு எடுத்து வரப்பட்டது.
இந்தநிலையில், இராஜவரோதயம் சம்பந்தனது புகழுடல் நாளை (5) காலை 6 மணியளவில் விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்து செல்லப்பட்டு 9:30 மணிமுதல் இறுதி அஞ்சலிக்காக அன்னாரது இல்லத்தில் வைக்கப்படும்.
இதைனையடுத்து ஞாயிற்றுகிழமை அன்னாரது இல்லத்தில் மதியம் இறுதி கிரியை இடம்பெற்று உடல் தகனம் செய்யப்படும்.
இதேவேளை, பெருந்தலைவர் சம்பந்தன் அவர்களின் இறுதி அஞ்சலிக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், உரியவர்களிடம் தொடர்பு கொண்டு அஞ்சலியில் கலந்து கொள்பவர்கள் இது குறித்து மேலதிக விபரங்களை பெற்று கொள்ளலாம்.
இதேவேளை, இன்று யாழ் மாவட்டத்தில் பொதுமக்கள் பலர் திரட்சியான அஞ்சலியில் கலந்து கொண்டனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.