எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாட்டின் முக்கிய நகரங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களைப் பாதுகாக்கும் நோக்குடன் விசேட காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளரும், உதவி காவல்துறை அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர் (F.U. Wudler) தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலம் நெருங்குவதைத் தொடர்ந்து, அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் காவல்துறை மா அதிபர் ஒரு விசேட செய்தியை வழங்கியுள்ளார்.
நகரங்களின் பாதுகாப்பு, வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு, அத்துடன் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வணிக வளாகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் மாத்திரம் விசேடமாக 2,500க்கும் மேற்பட்ட மேலதிக காவல்படையினர் இந்தக் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பண்டிகைக் காலத்தில், சிவில் உடையில் உள்ள காவல்துறை அதிகாரிகளும் உங்கள் உதவிக்கும் பாதுகாப்புக்கும் பணியில் இருப்பார்கள். அத்துடன், புலனாய்வு அதிகாரிகளும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை காவல்துறை, விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினர் பொதுமக்களைப் பாதுகாக்கத் தயாராக உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளப் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துமாறு காவல்துறைப் பேச்சாளர் கேட்டுக் கொண்டார்.
உங்கள் சிற்றூந்து அல்லது உந்துருளிகளை ஏதேனும் ஒரு இடத்தில் நிறுத்தும் போது, அது குறித்துக் கவனம் செலுத்தவும். உங்கள் வாகனத்தில் பெறுமதியான பொருட்கள் அல்லது பணத்தை விட்டுச் செல்ல வேண்டாம்.
உங்களுக்கு யாராவது குறித்து சந்தேகம் ஏற்பட்டால், அருகில் உள்ள காவல்துறை அதிகாரிக்கு உடனடியாகத் தெரிவிக்கவும்.