இலங்கை அங்கம் வகிக்கும் தெற்காசியப் பிராந்தியம் உலகில் மிக அதிக வருமானம் மற்றும் செல்வ ஏற்றத்தாழ்வு கொண்ட பகுதிகளில் ஒன்றாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய சமத்துவமின்மை 2024 அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், மிக அதிக சமத்துவமின்மையுடன் உள்ள பகுதிகளாகப் மத்திய கிழக்கு பிராந்தியம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இங்குள்ள செல்வம் பெரும்பாலும் எண்ணெய் வளம் மற்றும் அரச குடும்பங்களின் கைகளில் குவிந்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, வளங்கள் சமமாகப் பகிரப்படாமலும், வலுவான சமூக நலத் திட்டங்கள் இல்லாமலும் காணப்படும் சஹாரா கீழமை ஆபிரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.
லத்தீன் அமெரிக்கா வரலாற்றுரீதியான காலனித்துவ மரபுகள் மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக மூன்றாவது இடத்தில் உள்ளது.
மேலும், தெற்காசியா பிராந்தியமும் அதிக சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கு மொத்த செல்வத்தில் பாதியை (50%க்கும் மேல்) இங்குள்ள மேல்மட்டத்தில் 10% மக்கள் மட்டுமே வைத்திருப்பது சமத்துவமின்மையின் ஆழத்தைக் காட்டுகிறது.
தெற்காசியப் பிராந்தியத்தின் அங்கமாகிய இலங்கை, அண்மைக் காலங்களில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. இந்த நெருக்கடியின் விளைவாக, பணவீக்கம் அதிகரித்ததுடன், மக்களின் கொள்வனவு திறனும் குறைந்தது.
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் வறுமை நிலை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
இந்த காலகட்டத்தில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்ததுடன், சமூகப் பாதுகாப்பு வலைகள் இல்லாத காரணத்தால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மேலும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
எவ்வாறாயினும்,இதற்கு நேர்மாறாக, வலுவான சமூக நலத் திட்டங்கள் மற்றும் முற்போக்கான வரி விதிப்புகளின் காரணமாக உலகின் பிற பகுதிகளை விட ஐரோப்பாவில் வருமான ஏற்றத்தாழ்வு மிகவும் குறைவாக உள்ளது.
இந்தநிலையில், உலகளாவிய செல்வத்தைப் பொறுத்தவரை, மொத்த உலக செல்வத்தில் சுமார் 76% மேல்மட்டத்தில் 10% பேரிடம் குவிந்துள்ளது என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
எனவே, சமத்துவமின்மையைக் குறைக்கவும், நிலையான மற்றும் நியாயமான உலகப் பொருளாதாரத்தை உருவாக்கவும், அரசாங்கங்கள் தங்கள் சமூக நலத் திட்டங்களையும், செல்வ வரி போன்ற முற்போக்கான வரி விதிப்புகளையும் மேம்படுத்த வேண்டும் என்று அறிக்கையின் முடிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது

